தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த உரைநடை வடிவம், ஒருவர் தாம் நினைத்ததை நினைத்தவாறு எழுத உதவியது. ஆனால், உலகளவில் கட்டுரைகளின் வளர்ச்சி என்னவாக இருக்கிறது, அவை உண்டாக்கிய தாக்கத்தால் என்னென்ன பயன்கள் விளைந்தன என்பது குறித்து தமிழில் குறைந்த அளவே பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக வரலாற்றில் மறுக்கவும், மறக்கவும் முடியாத இடத்தைப் பிடித்த தலை சிறந்த 24 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இதில் கி.பி.1597 கால கட்டத்தில் எழுதப்பட்ட பிரான்சிஸ் பேக்கன் கட்டுரைகள் முதல் 1965-இல் எழுதிய மால்கம் எக்ஸ் வரையிலான எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக அக்காலச் சமுதாயத்தின் முற்போக்குவாதிகளை பெண் கல்வி வாயிலாக அடையாளம் காட்டும் டானியல் டீஃபா, அடிமைகளுக்கு மத்தியில் ஒரு கலப்பின பெண்ணின் அடையாள போராட்டத்தை விளக்கும் ஜோரா நீல் ஹர்ஸ்டன், விஞ்ஞானப் பார்வையில் உலகின் அழிவை கண் முன் நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை கோரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், காதல் பிடிக்காத தத்துவ அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமைகளின் ஆழமான கருத்துகளை இந்த கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.
பழங்குடியினர் உரிமை, அறிவியல், அரசியல், எழுத்து, வாசிப்பு, தத்துவம், உணவு எனப் பல்வேறு பொருள்களை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் இஸ்க்ரா. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு காலத்தில் தோன்றிய எழுத்துகளை அறிய இந்நூல் வழிகாட்டும். அறிவுத் தேடல் கொண்டவர்களும், மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.