அரசியலும் சிவில் சமூகமும் என்கின்ற இந்நூலானது சிவில் சமூகமும் நல்லாட்சியும், இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு பார்வை, அரசியல் பங்குபற்றல், உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை, உலக பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை என்கின்ற ஐந்து தலைப்புக்களில் கட்டுரைகளினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரைகள் அனைத்தும் அரசறிவியலினை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கு பயன்மிக்கதாகத் துலங்கும் என்பது எனது எதிர்பார்க்கை. இந்நூலினை வடிப்பதில் என்னை உந்திய புறச்சூழ்நிலைகளாக எனது பட்டப்படிப்பின்போது வரிவுரையாற்றிய பெறுமதிமிக்க விரிவுரையாளர்களது விரிவுரைகள், இறுதி ஆண்டின் எனது ஆய்வுக் கட்டுரையும் அது தொடர்பான வாசிப்புக்களும், அரசறிவியல் பாடப்பரப்பு தொடர்பான எனது ஈர்ப்பு போன்றன செல்வாக்கு செலுத்தியுள்ளன.
அரசறிவியல் பாடப்பரப்பானது மிகவும் விசாலமானதும் ஆழமானதுமான ஒன்று. இவற்றில் சில தலைப்புக்களினை தெரிவு செய்து அவற்றின்பால் நூலாக வடிவமைத்துள்ளேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க எனது சிறுதுளியான இம் முயற்சி எனது அரசறிவியல் துறைக்கும், அரசறிவியல் பாடப் பரப்புக்கும் வலுச்சேர்க்கும் என்பதனை இட்டு மனநிறைவடை கின்றேன்.