உள்ளடக்கத்தில் நேர்மையும், உருவத்தில் எளிமையும் விஜயேந்திரனின் அழகியல் எனலாம். தமிழ்த் தேசியத்தின் சுமையில் அவருடைய நேர்மை அமுங்கிப் போய்விடவில்லை. அநீதிக்கு எதிரான, நீதிக்கான, மனித விடுதலைக்கான, மனித மேன்மைக்கான குரலாக அவருடைய கவிதைகள் ஒலிக்கின்றன. இதில் சொல் விளையாட்டுக்கு இடம் இல்லை. வார்த்தைகளில் அலங்காரம் இல்லை. இயல்பான, நேரடியான படிமங்களால் அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அவை நம்முள் ஆழமான தாக்கத்தைச் செலுத்த வல்லவை. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எல்லாம் நாம் கடந்து வந்த வலிமிகுந்த காலத்தின் பதிவுகள். சமகால ஈழத்துக் கவிதையில், குறிப்பாக அரசியல் கவிதையில், விஜயேந்திரனின் இடத்தை இத்தொகுப்பு உறுதிப்படுத்துகின்றது என்பதை நான் அழுத்திக் கூறலாம்.