தமிழ் இலக்கிய அறிவை ஓரளவு பரப்ப வேண்டுமென்பதற்காகக் கதை நிகழ்ச்சியோடு ஒட்டிய பாடல் வரிகள் சிலவற்றை வாரா வாரம் தொடக்கத்தில் தந்தேன். இவற்றில் சில நானே எழுதியவையும் உண்டு. வாசகர்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்றார்கள் என்று தெரிந்து மகிழ்ந்தேன். குறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்.
கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை.
நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்…