தமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த் துளி. சயந்தனின் ஆதிரை, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியில் கூற எத்தனிக்கும் உண்மையைத் தாண்டியும் மேலதிக உண்மையைப் பெறுவதற்கான வாசக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு இலக்கியப் பிரதியாக வெளியாகியிருக்கின்றது. தன் இருப்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தனித்துவிடப்பட்ட இனமொன்றின், கடை நிலை மாந்தர்களைப் பற்றியும், போராட்டத்தின் மேன்மைகள், கீழ்மைகள் யாவற்றையும் எழுத்தாளரின் அக, புற உணர்வுகளோடு அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்நாவல். மக்களின் அனுபவங்களை நேர்த்தியான கதைகளாகத் தொகுப்பதன் மூலம் நாவலுக்கான ஒரு வடிவம் நெய்யப்பட்டிருப்பினும்கூட, வாசகர்களே நிரப்புவதற்கான இடைவெளிகளும் உண்டு. நிறைய இடங்களில் அது வாசகர்களிடம் ’வேலை வாங்குகிறது’ நாவலின் தொடக்கத்தில் தனி அத்தியாயமாக வரும் லெட்சுமணன் என்ற பாத்திரத்திற்கு முடிவில் என்ன நடந்திருக்குமென்பதை, வாசகரே தன்னுடைய கற்பனையாலும், ஊகத்தினாலும் நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே வருகின்ற ஆதிரையின் சொல்லப்படாத வாழ்வை, ஒரு தனி நாவலாகவே வாசகர்களால் கற்பனையில் சிருஷ்டித்துக்கொள்ளமுடியும். இவ்வாறான சாத்தியங்கள் நாவலோடு தனித்துவமான ஒரு நெருக்கத்தை வாசகர்களோடு ஏற்படுத்துகின்றன. ஈழப்போர் என்ற தரிசனத்தை, அந்தப்போரின் நேரடி வீச்சுக்குள் வாழ்ந்த சாதாரண அடித்தட்டு மக்களின் பார்வையில் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தி எல்லாக்கோணத்திலிருந்தும் அணுகும் சுதந்திரத்தை ஆதிரை உருவாக்கி அளிக்கின்றது. வெறும் அனுபவங்களை எழுதிவிடாது, படைப்பாற்றல் மூலம், அனுபவங்களுக்கிடையிலான சங்கிலித் தொடரை சாதுரியமாக உருவாக்கி, இலக்கியப் பிரதிக்கான அழகியலை சயந்தன் படைத்திருக்கின்றார். ஈழப்போர் பற்றிய தர்க்கங்களை, விடைகாணவியலாத வினாக்களை ஆதிரையின் பாத்திரங்களைக்கொண்டு கேட்க வைப்பதன் மூலம் ஒற்றைப்படையான நகர்வைத் தவிர்த்து வாசகரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல கோணங்களில் பார்க்கச் செய்கின்றது ஆதிரை.